அம்மாவின் டாப் சமூக நீதி திட்டம்!
கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு மேல்நிலை கல்வியை தொடரச் செய்யும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியிலே விலையில்லா சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
இன்றைக்கும் பள்ளி சீருடைகள் அணிந்து, மாணவிகள் விலையில்லா சைக்கிள்களில் செல்லும்போது ஒவ்வொரு மாணவ செல்வத்தின் முகத்திலும் புரட்சித்தலைவி அம்மா புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.
இதே போல இன்னொரு மிக முக்கியமான, மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்திய திட்டம் என்றால் விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம்.
2011 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக பொதுச் செயலாளரான புரட்சித்தலைவி அம்மா தேர்தல் வாக்குறுதிகளில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பள்ளி இறுதி படிப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்குவோம்” என்று அறிவித்தார்.
இந்த தேர்தல் வாக்குறுதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகின் கவனத்தையும் ஈர்த்தது.
ஏனென்றால் அதுவரை எந்த ஒரு அரசியல் தலைவரும் நான் வெற்றி பெற்றால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவேன் என அறிவித்திருக்கவில்லை.
இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம் ஓரளவு அதுவும் நகர்புறங்களில் மட்டுமே தலை காட்டிக் கொண்டிருந்தது.
புரட்சித்தலைவி அம்மாவின் சிந்தனையில் உதித்த இந்த திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சியை உறுதி செய்வதற்கும், பள்ளி படிப்பில் இருந்து கல்லூரி படிப்பு செல்லும் அந்த முக்கியமான காலகட்டத்தில் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் போதிய புரிதல் ஏற்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையிலும் உருவாக்கப்பட்டது.
சொன்னதை செய்து காட்டும் புரட்சித்தலைவி அம்மா 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு… திராவிடப் பேராசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த விலையில்லா லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மிட்டா மிராசு வீட்டுப் பிள்ளைகள் மேல் தட்டு பிள்ளைகள் மட்டுமே அறிவியலின் குழந்தையான லேப்டாப்பை தொட்டு தழுவ முடியும் என்று இருந்த நிலையில்… அதை மாற்றி குப்பன் வீட்டு பிள்ளைகளும் சுப்பன் வீட்டு பிள்ளைகளும் மடிக்கணினியை பயன்படுத்த முடியும் என்ற சம தர்ம சமூக நீதியை தமிழ்நாட்டில் சாதித்தவர் புரட்சித்தலைவி அம்மா.
திருக்கோயில்களில் இடப்படுகிற அன்னதானமாக இருந்தாலும் சரி… உலக அளவிலே வளர்ந்து வருகிற தகவல் தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி பாமரர்களுக்கும் அது பயன்பட வேண்டும் ஏழைகளையும் அது எட்டிப் பார்க்க வேண்டும் என்ற சமூக நீதி சிந்தனையை தனது அரசின் திட்டங்களில் செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா.
2011 செப்டம்பரில் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில்… தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அதாவது பிளஸ் டூ முதல் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பவர்கள் உட்பட இளங்கலை பட்டதாரிகள் 68 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்குவதற்கு பட்ஜெட்டில் படிப்படியாக நீதி ஒதுக்கினார் சமூக நீதி காத்த தேவதையான புரட்சித்தலைவி அம்மா.
ஐந்து ஆண்டுகளுக்கு பத்தாயிரத்து இருநூறு கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்தார்.
இந்தியாவிலேயே இப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முதல் மாநிலம் என்று உலக ஊடகமான பிபிசி எழுதியது.
இதுமட்டுமல்ல… உலக அளவிலான தொழில்நுட்ப பத்திரிகைகள் இந்த மெகா லேப்டாப் வழங்கும் திட்டத்தைக் கண்டு வியந்து போய் எழுதினார்கள்.
2011 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 26 லட்சம் லேப்டாப்புகள் இந்தியாவால் இறக்குமதி செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு மாநில அரசின் மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்கும் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு 14 லட்சம் லேப்டாப்புகளை முதல் கட்டமாக ஆர்டர் செய்தது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் லேப்டாப் விற்பனையில் 13% ஆகும். இந்த மாதிரியான ஆர்டரை எந்த உற்பத்தியாளராலும் பூர்த்தி செய்ய முடியாது… இப்படி ஒரு விலை மதிப்பு மிகுந்த திட்டத்தை விலையில்லாமல் மாணவர்களுக்காக வழங்கிடுவது என்பது ஆச்சரியாமானது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா செய்திருக்கிறார் என்று தொழில் நுட்ப வணிக பத்திரிகைகள் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் எல்லாம் தகவல் தொழில்நுட்ப புரட்சியே உண்டு செய்த இந்த திட்டத்தை நிர்வாக ரீதியாக செம்மையாக செயல்படுத்துவதற்கும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
அந்த வகையில் அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவதற்கான ஆறு விற்பனையாளர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
லெனோவா, எச் சி எல், விப்ரோ உள்ளிட்ட லேப்டாப் உற்பத்தியில் உலக தரத்தில் முத்திரை பதித்த தரமான நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தால் ஜன்னல் இல்லாத ஏழை எளிய மாணவர்களின் வீடுகளில் கூட லேப்டாப்புகளில் விண்டோஸ் திறக்கப்பட்டது. இந்த விண்டோஸ் மூலமாக பல்வேறு கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வியில் புதிய வாசல்கள் திறந்தன.
தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்வதற்கும், தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கும், புரட்சித்தலைவி அம்மாவின் விலையில்லா லேப்டாப் திட்டம் மிகப்பெரிய காரணமாக அமைந்தது என்று சமூக நீதி சிந்தனையாளர்கள் பாராட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அம்மாவின் இத்திட்டத்தைப் பார்த்து 2013-14 ஆம் ஆண்டில் ஒடிசா மாநில அரசும், 2015 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில அரசும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிவித்தன.
இந்தியாவுக்கும், உலகத்துக்கும் வழிகாட்டும் அறிவியல் பூர்வமான தலைவராக அம்மா என்றும் அறியப்படுகிறார்.
அம்மாவின் அடுத்த சமூக நீதித் திட்டமாக இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருப்பது தாலிக்குத் தங்கம்…
வரும் வாரம் பார்ப்போம்
