• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நிலமோசடி வழக்கு விசாரணை.!

ByAra

Oct 13, 2025

எம்எல்ஏ சகோதரர் தலைமறைவு.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் அண்ணன் முருகேசன் மீதான புகார்கள் பற்றியும், அவர் விரைவில் கைதாகலாம் என்றும் நமது அரசியல் டுடே கடந்த இதழில், ‘கைது வளையத்தில் திமுக எம்.எல்.ஏ.அண்ணன்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.வின் அண்ணன் முருகேசன் தலைமறைவாகிவிட்டார் என்று போலீஸ் வட்டாரங்களிலேயே செய்தி கசியவிடப்படுகிறது.  

சென்னை வேளச்சேரியை தலைமையிடமாக கொண்ட தனியார் சோலார் நிறுவனத்திற்கு சொந்தமான விவசாய மற்றும் தொழிற்சார் நிலங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அந்நிறுவன பங்குதாரர்களான அழகப்பன் மற்றும் பாலையா ஆகியோருக்கு கூட்டாக  உள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு இரு பங்குதாரரில் ஒருவரான கன்னியாகுமரியை சேர்ந்த பாலையா என்பவர் இறந்த நிலையில் அவருடைய மகன் ஆனந்தகுமார் என்பவரை கடந்த மே மாதம்,  ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் சந்தித்ததாகவும்,  போலி உயில் ஆவணங்களை ஏற்படுத்தி தருகிறேன்; சோலார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை நீ எழுதிக் கொடுத்து விடு மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்  என கடம்பூர் அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி மற்றும் பரிவல்லிக்கோட்டை கிராமத்திலுள்ள சுமார் 210 ஏக்கர் நிலத்தை ஏக்கருக்கு 2 லட்சம் வீதம் கடந்த மாதங்களில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் பேசப்பட்டது.

இதனையறிந்த தனியார் சோலார் நிறுவனத்தின் மேலாளர் சுவாமிநாதன் என்பவர் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 27.09.2025 அன்று 210 ஏக்கர் நிலமோசடி விவகாரத்தில் நேரில் ஆஜராக ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் முருகேசன், கடம்பூர் சார்பதிவாளர், கன்னியாகுமரியை சேர்ந்த ஆனந்தகுமார், சரோஜா, உமா மகேஸ்வரி மற்றும் மேலாளர் சுவாமிநாதன் ஆகியோருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் புகாரில் குறிப்பிட்ட போலி உயில் ஆவணங்களை முறையாக காண்பிக்காமலும் உரிய ஆவணங்களை மறைத்ததால் இரண்டாம் கட்டமாக 01.10.2025 விசாரணையை மேற்கொண்ட நிலையில் அயிரவன்பட்டி முருகேசன் வழக்கு விசாரணைக்கு பயந்து தலைமறைவாகியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட விஜிலென்ஸ் ஒருபுறம் கடம்பூர் சார் பதிவாளரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ள அதே சூழலில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையானது தொடர்ந்து நிலமோசடி, விவசாயிகளை மிரட்டுதல், காற்றாலை நிறுவனங்களுக்காக அரசு நீர்நிலைகள், மேய்ச்சல், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தொடர்புகார்களுக்கு உள்ளான  முருகேசனை தீவிரமாக தேடி வருகிறது.

நெருப்பின்றி புகையாது என்பது போல ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் ஆதரவின்றி இத்தகைய நிலமோசடி நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பில்லை எனவும், அண்ணன் அயிரவன்பட்டி முருகேசனை முன்னே தூண்டிவிட்டு தொகுதியின் அனைத்து வருவாய் பலன்களையும் அடைகிறார் என எம்.எல்.ஏ.வுக்கு எதிராக திமுகவினரே பேசத் தொடங்கிவிட்டனர்.

இந்த அட்ராசிட்டி சகோதரர்களுக்கு திமுக தலைமையும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையும் எப்போது கடிவாளமிடும் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Ara