• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உயிருடன் இருக்கும் நிலையில் இறந்து விட்டதாக போலியான ஆவணங்கள் மூலம் நிலமோசடி

ByKalamegam Viswanathan

May 21, 2023

ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இவர், கடந்த 35 வருடங்களாக தனது மனைவி மீனாட்சியுடன் டெல்லியிலேயே வசித்து வருகிறார்.
வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தனது சொந்த ஊருக்கு வந்து உறவினர்களை பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இவர்களுடைய மகன் மற்றும் மகள் கோவையில் பயின்று வருகின்றனர்.
இவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னதாக அரசியார்பட்டி கிராமம், வடக்கு ஆண்டாள் புரம் பகுதியில் 9 சென்ட் நிலத்தை வாங்கி முறையாக வேலியிட்டு பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிலத்தை குமார் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கப் போவதாக கூறி கோவையை சேர்ந்த ஒருவர் நிலத்தை பார்வையிட்டு சென்றுள்ளார்.
இதை அறிந்த உறவினர்கள் டெல்லியில் இருந்த ராஜேந்திரனுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த அவர்கள் கீழராஜ குலராமன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர்.
விசாரணையில் ராஜேந்திரன் மதுரை அருகில் உள்ள கிராமத்தில் இறந்ததாகவும், மீனாட்சி உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தில் இறந்ததாகவும் இறப்பு சான்றிதழ் இணைக்கப்பட்டிருந்தது. இப் போலியான இறப்பு சான்றிதழ்களை வைத்து கணேஷ்குமார் என்ற பெயரில் உசிலம்பட்டியிலேயே வாரிசு சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் சொந்த வீடு அமைந்துள்ள தெருவின் முகவரியிட்டு கணேஷ்குமாரின் ஆதார் அட்டையும் ஆவணத்தில் இருந்துள்ளது. இறந்தவர்களின் வாரிசான கணேஷ் குமார் என குறிப்பிடப்பட்டிருந்த அந்த அடையாளம் தெரியாத நபர், கோவையை சேர்ந்த குமார் என்பவரின் பெயருக்கு இவர்களது 9 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததற்கான ஆவணங்களும் இருந்துள்ளது.
இது குறித்து ராஜேந்திரன் சமூக ஆர்வலர் கணேசன் என்பவர் உதவியுடன் கீழராஜ குலராமன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் நிலத்தை விற்றவர் மற்றும் பத்திரம் பதிவு செய்தவர் என இருவரின் முகவரிக்கும் கடிதம் அனுப்பி சரி பார்த்துள்ளனர்.
ஆனால் இரண்டு முகவரிகளும் போலியானது என இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் கீழராஜ குலராமன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே திரும்பி உள்ளது. பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த செல் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
தன்னுடைய நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவு துறை அலுவலகம் மற்றும் நில அபகரிப்பு புகார் துறையிலும் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். 4 மாதங்கள் ஆகியும் இது வரை அதிகாரிகள் மட்டத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராஜேந்திரனும், அவரது மனைவி மீனாட்சியும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தங்களது இறப்பு சான்றிதழை காட்டி நீதி கேட்கும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், இதே நிலை வேறு யாருக்கும் மீண்டும் ஏற்படக் கூடாது எனவும் மீனாட்சி தெரிவித்தார்.