திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரத்தில் 66 மீட்டர் நீளமும் 66 மீட்டர் அகலமும் கொண்ட லெட்சுமிதீர்த்த குளம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த தீர்த்தக்குளமானது தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. முன்னோர்காலத்தில் இந்த குளம் வற்றாத புனித தீர்த்த குளமாக இருந்து வந்துள்ளது.

குறிப்பாக தேமல், பருஉள்ளவர்கள் இந்த குளத்தில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் நோய் குணமாகிவிடும். ஆகவே இந்த குளத்தை புண்ணிய புனித தீர்த்த குளமாக போற்றி பாதுகாத்து வந்தனர். சமீபத்தில் அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்துவிழுந்து சேதமானது.

மேலும் குளத்தில் தண்ணீர் வற்றியது இதனையடுத்து கோவில் நிர்வாகம். 6 கோடியே 50 லட்சத்தில் பழமை மாறாமல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் குளத்தின் 3 பக்கமும் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், மற்றொரு பக்கத்தில் கான்கிரிட்டிலான சுவரும் கட்டி, குளத்தின்மைய பகுதியை ஆழப்படுத்தி புனரமைப்பது என்று முடிவு செய்தது. இந்த நிலையில் கடந்த 2023 ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி அன்று பூமி பூஜையுடன் குளத்தில்புனரமைப்பு பணி தொடங்கி நடந்தது இதற்கிடையில்கடந்த 2 ஆண்டுகளாக திட்டமிட்டபடி சமீபத்தில் பணி முடிவடைந்தது.

இந்த நிலையில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி அன்று
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி காணொளி மூலம் லெட்சுமி தீர்த்த குளத்தைதிறந்து வைத்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் மலையில் இருந்து குற்றால அருவி போல பெருக்கெடுத்து மழை தண்ணீரானது லெட்சுமி தீர்த்த குளத்தில் விழுந்து நிரம்பி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒரு சில நாளில் தீர்த்த குளம் முழுவதுமாக நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சுற்றுலா பயணிகள் லெட்சுமி தீர்த்த குளத்தை பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.