• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலையில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு.., லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்..!

Byவிஷா

May 5, 2023

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரகுப்தருக்கு சன்னதி உள்ளது. சித்ரா பௌர்ணமியன்று மட்டும் சிதிரகுப்பருக்கு எருமை பால் அபிஷேகம் செய்யபடும். அதன்படி சித்ரா பௌர்ணமியான இன்று அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர குப்தருக்கு எருமை மாட்டு பால் அபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் நேற்று இரவு முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப் படவில்லை. அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர். மேலும் ஆட்டோக்களும் இயக்கப் பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.