தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் உள்ள 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், குளங்களைச் சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை அறநிலையத் துறை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 1,300 ஆண்டுகள் தொன்மையானது. இந்தக் கோயிலுக்கு இறுதியாக எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-ல் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி பாதுகாத்தமைக்காக கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலை 2024-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








