• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தென்காசி தொகுதியை குறி வைக்கும் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன்

Byவிஷா

Mar 16, 2024

அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இருவரும் தங்கள் கூட்டணிகளிடம் தென்காசி தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூறி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென்காசி (தனி) தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசியில் காங்கிரஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கடைய நல்லூரில் அதிமுக, சங்கரன்கோவில் மற்றும் ராஜபாளையத்தில் திமுக வெற்றிபெற்றது.

வாசு தேவநல்லூரில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இதற்காகவே அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியைத் தேர்வு செய்துள்ளார்.
அதேவேளை, பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியைப் பெற தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தீவிரம் காட்டிவருகிறார். ஜான்பாண்டியன் கேட்டபடி தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டால் அவர் தனது மகள் வினோலின் நிவேதாவை களமிறக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாஜக ஸ்டார்ட் அப்பிரிவு மாநிலத் தலைவர் ஆனந்தன் தென்காசி தொகுதியைக் குறிவைத்து நீண்ட காலமாக வேலை செய்து வருகிறார்.

பாஜக போட்டியிட்டால் வேட்பாளர் ஆனந்தன் போட்டியிடுவது 90 சதவீதம் உறுதியாகிவிட்டது என்றும், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், அதன் வேட்பாளர் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்றும் பாஜகவினர் கூறுகின்றனர். தென்காசி தொகுதியில் அமமுகவுக்கும் வாக்கு வங்கி உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக வேட்பாளர் மூன்றாம் இடம் பிடித்தார். பாஜகவுடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் என இரு கட்சி தலைவர்கள் தென்காசி தொகுதியை குறிவைப்பது, பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பலம் வாய்ந்த திமுக கூட்டணியில் இவர்களுக்கு போட்டியாக யார் களம் காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.