
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதுவரை கோடநாடு வழக்கு தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா என்பதால், எஸ்டேட் வளாகத்துக்குள் உள்ள பொருட்கள் குறித்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலருக்கே தெரியும். எனவே, கொடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன? அதில் இருந்து கொள்ளை சம்பவத்துக்கு பிறகு காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்பன குறித்து கடந்த வாரம் சசிகலாவிடம் விசாரித்தனர்.
ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய 217 பேரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கூடலூர் மர வியாபாரி சஜீவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இவர் கொடநாடு பங்களாவின் உள் அரங்க வேலைபாடுகள் செய்து கொடுத்துவந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்தார்.அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாநில வர்த்தக அணி பொறுப்பை சஜீவனுக்கு வழங்கியது அக்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சஜீவனுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடைபெற்றது. இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் கேரள எல்லையில் காரில் சென்ற இருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த இருவரை விடுவிக்க காவல்நிலையத்திற்கு சென்றவர் சுனில். சுனிலின் சகோதரரான சஜீவன்மீது தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் பதவி வகித்துவருகிறார். தற்போது இவரிடம் நடத்தப்படும் விசாரணை வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். சசிகலா. சஜீவன் கூறும் தகவலைப் பொறுத்து கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் திசை மாற வாய்ப்புள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, கோடநாடு வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
