• Mon. Apr 29th, 2024

பிடித்த ஆசிரியை வேண்டும் என வீதியில் இறங்கி போராடிய மழலைகள்..!

Byவிஷா

Oct 6, 2023
புதுச்சேரியில் பள்ளியை மேம்படுத்திய ஆசிரியை வேண்டும் என மழலைகள் வீதியில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்கு போகமாட்டேன்னு பொதுவாக குழந்தைகள் அடம் பிடிக்கும். சிறு வயதில் இந்த டீச்சர் கிட்ட தான் படிப்பேன் என பொதுவாக எல்லாக் குழந்தைகளும்  5 வயசு வரை சொல்லும். டீச்சர் ஒரு நாள் லீவ் போட்டாலும் அதற்காக கதறி அழும். தொடக்கப்பள்ளி ஆசிரியைக்காக மாணவர்கள் வீதியில் இறங்கி போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டீச்சருக்காக பள்ளியை மொத்த மாணவர்களும் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.  
புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் உசுடு தொகுதி அகரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து  வந்தவர் அனிதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு விட்டார்.  அதிர்ச்சியடைந்த அந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியை அனிதாவை மீண்டும் திரும்ப அழைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவருடைய  பணியிட மாற்றத்தினை ரத்து செய்து மறுபடியும்  இதே பள்ளியிலேயே பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தப்பட வேண்டும். இல்லையெனில்   ஓட்டு மொத்தமாக இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் டி.சியை பெற்று வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவோம் எனவும் கூறி  பெற்றோர் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆசிரியை அனிதாவை மீண்டும் இதே பள்ளிக்கு மாற்றப்படும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி, மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால், பள்ளி வளாகம் மாணவர்கள் யாரும் இல்லாமல்  வெறிச்சோடி காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *