அடுத்தடுத்த புராஜக்ட்களில் தன்னை பிசியாக வைத்துக் கொள்வதில் நடிகை குஷ்பூ கவனமாக இருப்பவர்!
தயாரிப்பாளர், வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை நடிகை, ரியாலிட்டி ஷோக்கள் என்று தொடர்ந்து பிசியாக காணப்படுகிறார். சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் அடுத்த சீரியலை துவங்கியுள்ளார்.
நடிகை குஷ்பூ சிறப்பான நடிகையாக 90களில் பெயர் வாங்கியவர்.. முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. ஒரு கட்டத்தில் திருமணம் முடித்து தமிழக மருமகளாக செட்டில் ஆன குஷ்பூ, சிறந்த குடும்பத்தலைவியாக மட்டுமின்றி சிறப்பான தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். தன்னுடைய கணவர் சுந்தர் சியுடன் இணைந்து பல படங்களை தயாரித்து வருகிறார். அரண்மனை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இவர்களது அவ்னி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. தொடர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ சின்னத்திரையிலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக உள்ளார்.
சின்ன சின்ன ஆசை, அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், குங்குமம், கல்கி, நந்தினி உள்ளிட்ட தொடர்களில் கலக்கிய குஷ்பூ நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான லஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வந்தார்! இந்நிலையில் தற்போது புதிய தொடரை துவக்கியுள்ளார் குஷ்பூ. இந்தத் தொடரின் கதையை அவரே எழுதியுள்ளார். இந்த தொடரின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. மீரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரின் பூஜை புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விரைவில் கலர்ஸ் டிவி தமிழில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் தனக்கு வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கலர்ஸ் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பூ நடுவராக வருவது குறிப்பிடத்தக்கது.


