• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேசரி கண்மாயில் மீன்பிடி திருவிழா..,

ByVasanth Siddharthan

Apr 29, 2025

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டி கிராமத்தில் உள்ள கேசரி கண்மாயில் மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி இன்று விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிறுகுடி, பூசாரிபட்டி, தேத்தம்பட்டி நல்ல கண்டம் கோட்டையூர் சிரங்காட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நள்ளிரவு முதலே இப்பகுதியில் குவிய ஆரம்பித்தனர்.

முன்னதாக, ஆண்டுதோறும் இந்த கண்மாயில் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழா நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து கண்மாய்க்குள் இறங்கிய பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா, மற்றும் கூடை உள்ளிட்டவைகளை வைத்து, பல்வேறு நாட்டுவகை மீன்களான கட்லா, கெளுத்தி, ரோகு, ஜிலேபி உள்ளிட்டவற்றை ஆர்வமுடன் பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சரிசமமாக கலந்து கொள்ளும்
இது போன்ற சமத்துவ மீன்பிடித்திருவிழா நடத்தப்படுவதன் மூலம் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதுபோன்ற மீன்பிடித் திருவிழாவில் மக்கள் தங்களுக்குள் ஏற்படும் வேற்றுமையை மறந்து சமத்துவமாக மீன்களை பிடித்து மகிழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.