ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 28 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி கசூரி என்று அழைக்கப்படும் சையிபுல்லா காலித் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் ஆதரவுடன் செயல்படுகிறது.
யார் இந்த சையிபுல்லா காலித் கசூரி?
கசூரி லஷ்கர்-இ-தொய்பாவின் துணைத் தலைவன். பாகிஸ்தானிய பயங்கரவாதியும், லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனருமான ஹபீஸ் சயீதுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் முழு ஆதரவுடன் செயல்படும் கசூரி, பாகிஸ்தான் ராணுவத்தின் ‘அன்பான உறவு’ என்றும் அறியப்படுகிறான். ஜம்மு காஷ்மீரில் இதற்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதல்களிலும் கசூரிக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறுப்புப் பேச்சுகளுக்கு பெயர் பெற்ற கசூரி, இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறான். இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத்தின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பஞ்சாபின் கங்கன்பூரில் ராணுவ வீரர்களுக்காக கசூரி உரையாற்றியுள்ளான். பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் சாஹித் சரீன் கட்டக்கின் அழைப்பின் பேரில் சென்ற கசூரியை மலர்கள் தூவி வரவேற்றதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய வீரர்களைக் கொன்றால் கடவுளிடமிருந்து வெகுமதி கிடைக்கும் என்பது போன்ற வெறுப்பு கருத்துக்களை அவன் தனது உரையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பிப்ரவரி 2-ம் தேதி கைபர் பக்துன்க்வாவில் நடந்த ஒரு கூட்டத்திலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த கசூரி அழைப்பு விடுத்திருந்தான். 2026 பிப்ரவரிக்குள் காஷ்மீரை கைப்பற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும், வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கசூரி கூறியிருந்தான்.
அபோட்டாபாத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாத பயிற்சி முகாமில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தானிய இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. லஷ்கர்-இ-தொய்பாவின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மர்காஸி முஸ்லிம் லீக் (PMML), எஸ்எம்எல் ஆகியவற்றின் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் கசூரியும் கலந்து கொண்டான். இந்த முகாமில் இருந்துதான் இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கசூரி தேர்ந்தெடுத்தான் என்றும், பின்னர் அவர்களை இலக்குகளைத் தேர்ந்தெடுத்துக் கொல்வதில் பயிற்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
லஷ்கர்-இ-தொய்பாவின் பெஷாவர் தலைமையகத்தின் தலைவனாகவும் கசூரி இருக்கிறான். பாகிஸ்தான் மத்திய பஞ்சாப் மாகாணத்தில் லஷ்கர்-இ-தொய்பாவின் மற்றொரு வடிவமான ஜமாத் உத் தாவாவின் (JuD) ஒருங்கிணைப்புக் குழுவிலும் கசூரி செயல்பட்டு வந்துள்ளான். ஜமாத் உத் தாவா 2016-ல் அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன், 2009-ல் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் பட்டியலிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.