• Sun. May 5th, 2024

சாலை முறைகேடு – பொதுமக்களை மிரட்டிய கரூர் மாவட்ட ஆட்சியர்..!

Byவிஷா

Oct 9, 2023

தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை முறைகேட்டை வெளிப்படுத்திய பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தரகம்பட்டியில், புதிதாக போடப்பட்டுள்ள சாலை, தரமற்ற முறையில் உள்ளது. இதை கைகளாலேயே பெயர்த்து எடுக்கும் வகையில் உள்ளது. இதனால், இந்த சாலை சிறு மழைக்கே தாங்காது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். புதிதாக போடப்பட்டுள்ள சாலையை, கைகளாலேயே பெயர்ந்து விடும் அளவுக்கு தரமற்ற முறையில் இருப்பதாகவும், தோசைக்கல்லில் இருந்து தோசையை எடுப்பது போல, கையோடு பெயர்ந்துகொண்டு வரும் வகையில் தரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டும் பொதுமக்கள், இந்த சாலைக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், இந்த சாலை அமைப்பு பணியை முறையாக கண்காணிக்காத நெடுஞ்சாலை துறை ஊழியர்கள்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது முறைகேடு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து, சாலை முறைகேட்டை வெளிப்படுத்திய பொதுமக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பட்டியில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தரமற்ற சாலை அமைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் அதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஆட்சியர், பொதுமக்களை மிரட்டுவது எந்த வகையில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *