63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவரும், அம்மை அப்பன் இல்லாத இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றினை உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் முக்கனிகளில் முதற்கனியான மாங்கனிக்கு முக்கியத்துவம் அளித்து நடத்தப்படும் மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

சுமார் 1600 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வை இன்றும் நம் கண் முன் கொண்டு வரும் மாங்கனி திருவிழா நடைபெறும் காரைக்கால் அம்மையார் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவுற்றதையடுத்து கடந்த 1-தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
கும்பாபிஷேக நாளான இன்று காலை ஆறாம் கால பூஜையில் மகாபூர்ணகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசத்தினை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து ஆலய விமானத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், திருப்பணிக்குழுவினர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.