மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பால் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியங்குடியில் உள்ள தனியார் தோட்டத்தில் கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா கொடியேற்றம் நடைபெற்றது.

தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மங்கள தேவி கண்ணகி கோவில். இக்கோவில் 2000 ஆண்டுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தமிழக எல்லையில் இருந்தாலும் இக்கோவில் கேரளா வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.
கண்ணகி கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி விழா இரு மாநில பக்தர்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவிற்கு முன்பாக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக கம்பம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடத்தப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா வருகின்ற 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு முன்னதாக ஏப்ரல் 29ஆம் தேதி கண்ணகி கோவில் விழா கொடியேற்ற கம்பம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளையினர் பளியங்குடி பகுதிக்கு சென்றனர்.
அப்போது, இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட கூடலூர் கண்ணகி தேவி அறக்கட்டளையினர், தாங்களும் கொடியேற்றுவோம் எனக் கூறி பளியன்குடி பகுதிக்கு வந்ததால், பிரச்சனைகள் வரக்கூடும் என வனத்துறையினர் இரு தரப்பினரையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கொடியேற்ற அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உத்தமபாளையம் வட்டாட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடம் பேசி மாவட்ட ஆட்சியரை சந்திக்கும்படி அறிவுறுத்தினர்.
இதற்கிடையே அதே நாளில் குறிப்பிட்ட நேரத்தில், கம்பம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கம்பத்தில் உள்ள கண்ணகி அறக்கட்டளை மண்டப வளாகத்தில் கண்ணகி கோயில் விழா கொடியேற்றினர்.
அதன் பின் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அறக்கட்டளையினர் ஒன்று சேர்ந்து கொடியேற்றம் நடத்துவதாக இருந்தால் அனுமதி அளிக்கப்படும், இல்லையேல் பளியங்குடி பகுதியில் யாருக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர். மேலும் தனித்தனியாக கொடியேற்ற வேண்டுமென்றால் பளியன் குடியை தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியதன் பேரில் இன்று தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியங்குடி தனியார் தோட்ட பகுதி ஒன்றில் கூடலூர் கண்ணகி தேவி அறக்கட்டளையின் சார்பில் கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து கொடிமரம் நடப்பட்டு கண்ணகி உருவம் பொறித்த கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர். பின்னர் கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்கள் விரதம் இருந்து வரும் பன்னிரண்டாம் தேதி கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளனர். இந்த நிகழ்வில் கூடலூர் கண்ணகி தேவி அறக்கட்டளை தலைவர் மகேந்திரன், செயலாளர் லலிதா, பொருளாளர் குமரன் மற்றும் அறக்கட்டளை சார்ந்தவர்களும் பக்தர்களும் பங்கேற்றனர்.