மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சி அரோகரா கோஷத்துடன் துவங்கியது.

கந்த சஷ்டி விழா விரதம் துவக்கும் முதல் நிகழ்ச்சியாக முதலில் சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.
திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டபின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர்.
காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாரும், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும்.

சுவாமி தினமும் இரவு 7:00 மணிக்கு தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 26ல் தேதி சக்தி வேல் வாங்குதல், 27ல் சூரசம்ஹார லீலை, 28 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள் , கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறும்.
சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பால் எலுமிச்சைச்சாறு தேன் கலந்த திணை மாவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும் மேலும் சஷ்டி மண்டபத்தில் தினமும் அன்னதானம் கோயிலில் நடைபெறும் பூஜைகளை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் .

மேலும் கோயிலில் பக்தர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மாநகராட்சியின் சார்பில் கிரிவலப் பாதைகளில் குடிநீர் வசதி மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது .
சரவணப் பொய்கை பகுதியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.