• Sat. May 4th, 2024

கள்ளழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்

Byவிஷா

Apr 23, 2024

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணையே அதிர வைத்தது.
மதுரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சைவமும், வைணவமும் இணைந்த திருவிழாவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் என்றழைக்கப்படும் கள்ளழகர் மதுரையில் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண வைகையாற்றின் வழியாக வருகிறார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வரும் வழியில் 480 ஆலயங்களில் மண்டகப்படி அளித்து வருகிறார். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் சைவ வைணவ இணைப்பு விழாவாகத் திகழ்கின்றன.
உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளினார். அதன்படி இன்று அதிகாலை 5.50 மணிக்கு கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க தங்க குதிரையில் பச்சை நிற பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். கள்ளழகர் பச்சை நிறப் பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். பச்சை நிற பட்டுடுத்தி ஆற்றில் இறங்கி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார். அப்போது பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்து அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.கோவிந்தா கோஷத்தில் மதுரை குலுங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *