• Sun. Apr 28th, 2024

“ஜூகல் பந்தி” இசை நிகழ்ச்சியால் விழா கோலம் பூண்டது ஈஷா..!

ByKalamegam Viswanathan

Oct 19, 2023

பார்வையாளர்களை இசையால் வசப்படுத்திய புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள்!

ஈஷா நவராத்திரி விழாவின் 4-ம் நாளான இன்று (அக்.18) புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய, கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி இசையின் கலவையாக அமைந்த “ஜூகல்பந்தி” இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, 4-ம் நாளான இன்று புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய “தேவி ப்ரோவ சமயமிதே” என்ற ஜூகல்பந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பொருள், “என்னைக் காப்பதற்கு இதுவே தருணம் தேவி” என்பதாகும். பாரதத்தின் பாரம்பரிய இசை மரபில் “ஜூகல் பந்தி” என்பது பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பலவிதமான இசைக் கருவிகளை அல்லது வாய்ப்பாட்டு கலையை ஒரு கலவையாக வெளிப்படுத்துவது. அடிப்படையில் இசை கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை இசையின் மூலம் வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சி.

தெய்வீகமான பெண் தன்மையைக் கொண்டாடும் வகையில் புராஜெக்ட் சமஸ்கிருதி மாணவர்கள் “ஜெகதீஸ்வரி பிரம்ம ஹ்ரிதயேஸ்வரி” என்கிற பாடலை முதல் பாடலாகப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர். தொடர்ந்து இசைக்கப்பட்ட இசையும் பாடல்களும் அரங்கில் இருந்த பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக, ஜாகீர்நாயக்கன் பாளையம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. அன்னபூரணி துரைசாமி, நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. விஜயராணி பாரதிராஜா, கோவை மாவட்டம் விவசாய சங்க தலைவர் திரு. ஆறுச்சாமி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் திரு. பி. வேலுச்சாமி மற்றும் ஆலாந்துறை பஞ்சாயத்து கவுன்சிலர் திரு. மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நவராத்திரியின் 5-ம் தினமான நாளை (அக்.19) மாலை 6.30 மணிக்கு திரு. விவேக் சதாசிவம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *