• Sat. May 4th, 2024

ஜல்லிக்கட்டு கலையரங்கம் என்பது ஒரு நினைவுச் சின்னம்.., அமைச்சர் பி மூர்த்தி பேச்சு..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024

ஜல்லிக்கட்டு கலையரங்கம் என்பது ஒரு நினைவுச்சின்னம். இதன் காரணமாக, எந்த வாடிவாசலும் மூடப்படாது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர் நகர், பாலமேடு நகர், திமுக சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, சேலம் மாநாடு, ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் வருகை தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில், அமைச்சர் பி மூர்த்தி பேசியதாவது..,
பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்காக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடை நீடித்துக் கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வாக தடையில்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்தனர். இதனை நினைவு கூறும் விதமாக, அலங்காநல்லூர் பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிறப்பு அரசாணை வெளியிட்டார். ஜல்லிக்கட்டு நிகழ்வை போற்றும் வகையில் பாரம்பரிய பண்பாட்டை நினைவுபடுத்த கலையரங்க மைதானம் கட்டப்பட வேண்டும் என்று அறிவித்தார்.
இதனை அடுத்து, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா காணப்பட உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானத்திற்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்கும். எனவே, அரசியல் ஆதாயத்திற்காக ஜல்லிக்கட்டு வாடிவாசல் மாற்றப்பட உள்ளதாக சிலர் பரப்பும் அவதூறு செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஜல்லிக்கட்டை பார்க்க முடியாத பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டு கழிக்க கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு கலாச்சார பண்பாட்டு கண்காட்சியாகவே நடைபெறும். அவதூறு தகவல்களை நம்ப வேண்டாம். ஆண்டாண்டு காலமாக அந்தந்த பகுதியில் நடைபெறக்கூடிய பாரம்பரிய நிகழ்வுகள் எந்த ஆண்டிலும் மாற்றப்படாத நிகழ்வாக நடைபெறும். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற அரசு விழாக்கள் எந்த காலத்திலும் தடையில்லாமல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திமுகவைத் தலைவர் எம். ஆர். எம். பாலசுப்பிரமணியன், சோழவந்தான் தொகுதி மேலிட பார்வையாளர் சுப.த. சம்பத், ஒன்றியச் செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பேரூராட்சித் தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், துணைத் தலைவர் சாமிநாதன், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் நிர்வாகிகள் நடராஜன், அருண்குமார், செல்வம், தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *