இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். இந்த வழக்கு மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல பேர் பேரறிவாளன் விடுதலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயுள் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்ற ஸ்டாலின் அவரிடம் நலம் விசாரித்தார். இந்த புகைப்படத்தை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “பேரறிவாளனை தமிழக முதல்வர் கட்டித்தழுவி வரவேற்கிறார். ஆனால் பாஜக அரசியல் விளையாட்டு விளையாடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு துளியாவது அவமானம் இருந்தால் இந்த விவகாரத்தை காரணம் காட்டி திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாரா?. முதல்வரின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பில்லாத தன்மையை காட்டுகிறது” என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.