• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஜனாதிபதி வேட்பாளராக இஸ்லாமியர் – வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி தீவிரம்

ByA.Tamilselvan

Jun 10, 2022

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை அறிவித்துள்ளது. அதன்படி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 29-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும். போட்டியிருக்கும் பட்சத்தில் ஜூலை 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும். ஜனாதிபதி தேர்தலில் 776 எம்.பி.க்கள் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இவர்களது ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 ஆகும். இதில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற முடியும். பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவதாக தெரியவந்துள்ளது.
மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஜனாதிபதி தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்கும் என்பது ஜனாதிபதி தேர்தலில் தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடும். இது 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் வலுவாக உள்ள பா.ஜனதா தலைமையிலான கூட்டணி சில மாநில கட்சிகளின் ஆதரவை பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த தடவை ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளமும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்தன.
இந்த ஆண்டும் இந்த இரு கட்சிகளும் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு பா.ஜனதா மூத்த தலைவர்கள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதால் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இடையே அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் விறுவிறுப்பை ஏற்றி உள்ளன. தற்போதைய நிலவரப்படி பிரதமர் மோடி புதிய ஜனாதிபதி பதவிக்கு யாரும் எதிர்பாராத வகையில் வேட்பாளரை அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் அல்லது இஸ்லாமியர் ஒருவருக்கு புதிய ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை பிரதமர் மோடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. வட்டாரத்தில் 6 பேரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு, கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், உத்தரபிரதேச கவர்னர் அனந்திபென் படேல், சத்தீஷ்கர் கவர்னர் அனுசுயா, கர்நாடக கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகிய 6 பேர் பெயர்தான் தீவிரமாக பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 6 பேரில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு பெயர் முன்னிலையில் உள்ளது. வேட்பாளர் தேர்வு போட்டியில் அவர்தான் முன்களத்தில் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரவுபதி முர்மு ஒடிசா மாநில பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் உள்ள சந்தல் பழங்குடி இனம் மிக மிக பழமையான இனமாகும். எனவே அந்த பழங்குடியினரை கவுரவிக்கும் வகையில் திரவுபதி முர்முவை ஜனாதிபதி ஆக்க பிரதமர் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. திரவுபதி முர்மு ஜனாதிபதியாக தேர்வானால் அந்த பதவியில் அமரும் முதல் இந்திய பழங்குடி இன பெண் என்ற பெருமையை பெறுவார். ஜார்கண்ட் மாநிலத்தில் 5 ஆண்டுகள் கவர்னர் பதவியை நிறைவு செய்துள்ள திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரிடமும் நன்கு பழகி வருகிறவர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. அதோடு அனைத்து கட்சி தலைவர்களிடமும் அவர் நல்ல அணுகுமுறையில் உள்ளார். இந்தியாவில் 6 மாநிலங்களில் பழங்குடி இன மக்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. பல தொகுதிகளில் எம்.பி.க்கள் தேர்வை தீர்மானிப்பதில் பழங்குடி இன மக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் பிஜூ ஜனதாதளம் ஆதரவை உறுதியாக பெறுவது மட்டுமின்றி 6 மாநில பழங்குடி இன மக்களின் ஆதரவை பெற முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டுதான் திரவுபதி முர்முவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி இந்தியாவில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்த கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் கேரள கவர்னர் ஆரீப் முகமது கானுக்கு ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம். ஒருவேளை திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் ஆரீப் முகமது கானை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திரவுபதி முர்மு, ஆரீப் முகமது கான் இருவரில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சத்தீஷ்கர் கவர்னர் அனுசுயா மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் விரைவில் வரவுள்ள மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதுபோல உத்தரபிரதேச மாநில கவர்னர் அனந்திபென்னுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்கிறார்கள். பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் பெயரும் தற்போது புதியதாக ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு பேசப்படுகிறது. ஆனால் ராஜ்நாத்சிங் அதை விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு பதில் கர்நாடக மாநில கவர்னராக இருக்கும் தவர்சந்த் கெலாட்டுக்கு பதவி கொடுக்கலாம் என்று பரிசீலிக்கப்படுகிறது. இவர் பா.ஜ.க.வில் உள்ள தலித் இன தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். எனவே தவர்சந்த் பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையே தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி பதவி கிடைக்காத பட்சத்தில் அவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு பிறகு சில மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட உள்ளனர். அப்போது டாக்டர் தமிழிசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படப்போவது யார் என்பதில் பா.ஜ.க. வட்டாரத்திலும் மிகுந்த பரபரப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை வேட்பாளராக களம் இறக்க சோனியா முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று மாநில ஜனாதிபதி தேர்தல் அட்டவணை வெளியானதும் காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கினார். நேற்று இரவு அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்த ஆலோசித்து வருகிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியை சேராத எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மாநில கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருக்கு வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய காரணங்களால் நாடு முழுவதும் அனைத்து முக்கிய கட்சிகளிடமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.