சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட தொண்டர்கள் விரும்பினால் தலைமை பரிசீலனை செய்யும் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைக்க முயற்சி எடுத்த ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- த.வெ.கவில் செங்கோட்டையன் இணைந்திருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் இணைந்ததால் பலமா? பலவீனமா? என்பது வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெரும் வாக்குகளை பொறுத்து தான் சொல்ல முடியும்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி, சீட் ஒதுக்கீடு குறித்து வைகோவும், மு.க. ஸ்டாலினும் பேசி முடிவு செய்வார்கள். ஒரு கட்சியின் அடையாளம் என்பது கொடி, சின்னம் தான். அந்த வகையில் தேர்தலில் எங்களுடைய சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது தொண்டர்கள் விருப்பம். இது குறித்து கூட்டணி பேச்சுவார்த்தையின் போது சுமூகமாக பேசி முடிவெடுக்கப்படும். மேலும், தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட தொண்டர்கள் விரும்பினால் தலைமை பரிசீலனை செய்யும், என்றார்.
பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் பவுன் மாரியப்பன், தீர்மானக் குழு உறுப்பினர் முத்து செல்வம், நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கேசவராஜன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.








