• Fri. Apr 26th, 2024

அமெரிக்கா செல்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வெளியே டெல்லிக்கு மட்டுமே இது வரையிலும் சென்றுள்ளார். இந்நிலையில் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவுக்குச் செல்வாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுமாறு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சார்பில் முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிர்வாகிகளான கால்டுவெல் வேள்நம்பி, பாலசாமிநாதன், மயிலாடுதுறை சிவா, கீர்த்தி ஜெயராஜ், சேகர் சுவாமிநாதன், கதிரவன், ராம் மோகன், ரங்கநாதன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து நியூயார்க் நகரில் நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2022 பெருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெருந்தொற்றின் தன்மையறிந்து தனது அமெரிக்க பயணத்தை உறுதி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சார்பில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கொரொனோ நோய் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் உறுதியாகிவிடும் என்று தெரிகிறது.


ஒமைக்கிரான் தொற்று அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இந்த தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் 6 மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்றின் நிலைமையை தற்போது கணிக்க இயலாத நிலையே உள்ளது. இதன் அடிப்படையிலேயே முதலமைச்சரின் பதிலும் உள்ளது. ஆனாலும், அமெரிக்கத் தமிழர்களின் பெருவிழாவில் பங்கேற்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிகிறது.

தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்ரு காரணமாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா இணைய வழியாக நடைபெற்றது. 2022ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடைபெற உள்ள விழாவுக்கு அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *