• Fri. May 3rd, 2024

வாக்கு சதவீதத்தில் குளறுபடி : ராதாகிருஷ்ணன் விளக்கம்

Byவிஷா

Apr 20, 2024

வாக்குப்பதிவு சதவீதம் நேற்று இரவு 7 மணியளவில் 72.09சதவீதம் என அறிவிக்கப்பட்டு, பின்னர், நள்ளிரவில் 69.46சதவீதம் ஆக குறைந்தது எப்படி என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக, 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தவர்களை தேர்தல் அலுவலர்கள் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், 68,321 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்கு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர், வாக்குச்சாவடி மையங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகள் நேற்று இரவு வரை நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளை சேர்த்து ஒட்டுமொத்த சராசரியாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக நேற்று இரவு 7 மணி நிலவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். சென்னையில் சராசரியாக 67மூ வாக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு நள்ளிரவு 12 மணி அளவில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46சதவீதம் என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4சதவீதம் வாக்குப் பதிவு குறைந்துள்ளது என்றார். தொடர்ந்து, வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்பட்டதில் முரண்பாடுகள் ஏற்பட்டது குறித்துப் பேசினார் ராதாகிருஷ்ணன். வாக்குச்சாவடி அலுவலர்களின் ஆப்பில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் உத்தேச வாக்குப்பதிவு நிலவரம் 7 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு வாக்குச்சாவடியில் பதிவான எண்ணிக்கையையும் கணினியில் பதிவிட்டு, மொத்தமாக கணக்கீடு செய்தபோது, 69.46சதவீத வாக்குப்பதிவு என தெரியவந்தது. கடந்த 2 முறை இந்த உத்தேச வாக்குப்பதிவு சதவீதம், இறுதியில் சரியாக இருந்தது. இந்த முறை சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *