தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேக விழா அறநிலையத்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆகம விதிப்படி நடைபெற்ற நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிக்காக பல்வேறு நபர்கள் நன்கொடைகளை வழங்கினர்.
இந்த நிலையில் நன்கொடைகள் வழங்கியதில் கோவில் பூசாரி முனியாண்டி மற்றும் சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சேட் பரமேஸ்வரன் என்ற தனி நபரும் இணைந்து லட்சக்கணக்கான ரூபாய்களை தன்னிச்சையாக வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆதரவோடு முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், துணை ஆணையர் மற்றும் திண்டுக்கல் இணை ஆணையர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்கம்பட்டி பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




