பெரம்பலூர் அருகே காவல்நிலையத்திற்குள் மதுபோதையில் 2 வழக்கறிஞர்கள் ரகளையில் ஈடுபட்டும், காவலர்களை தரக்குறைவாகவும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அண்ணாதுரை என்ற இரண்டு வழக்கறிஞர்கள் அவர்களது வாதியுடன் வழக்கு சம்பந்தமாக குன்னம் அருகே உள்ள மங்களமேடு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
வழக்கறிஞர்கள் மற்றும் அவரது வாதியும் மதுபோதையில் இருந்ததால் காவல் நிலையத்திற்குள் அவர்கள் வந்த போதே மதுவின் வாடை அடிக்க தொடங்கியுள்ளது.
வழக்கறிஞர்கள் மேல் உள்ள மரியாதையால் போலீசார் மதுவின் வாடையாக இருக்காது என இருந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த பெண் காவலருடன் வழக்கறிஞர்கள் பேச ஆரம்பித்த போதுதான், மதுவின் வாடை அதிகமாக வெளிவரத் தொடங்கியது.
அதனை அறிந்த இதர காவலர்கள் வழக்கறிஞர்களே இப்படி மது அருந்திவிட்டு காவல் நிலையத்திற்கு வரலாமா?
உங்கள் வழக்கு தொடர்பான போலீசார் அமைச்சர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றிருப்பதாகவும், அவர்கள் வந்த பின் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். மேலும் மதுபோதையில் வருவது தவறு என அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கு மது போதையில் இருந்த வழக்கறிஞர்கள் அண்ணாதுரை மற்றும் இளங்கோ போலீசாரை ஆபாச வார்த்தைகள் மற்றும் தரக்குறைவாக பேசியுள்ளனர். நாங்கள் வழக்கறிஞர்கள் உங்களை எங்கள் சங்கம் மூலம் ஒரு வழி செய்திடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இரு வழக்கறிஞர்களின் இந்த அலப்பறையால் காவல்நிலையத்திற்கு வந்த பொதுமக்களே ஆடிபோய்விட்டனர்.
சட்டத்திற்காக போராடி நீதி பெற்று தர வேண்டிய வழக்கறிஞர்களே இப்படி மது போதையில் போலீசாரை மிரட்டுவது அதுவும் காவல்நிலையத்திற்குள்ளே சென்று மிரட்டுவது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.