புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காரைக்காலில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இன்று காரைக்கால் வந்திருந்தார். அவருக்கு காரைக்கால் கடற்கரை சாலையில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ராஜாத்தி நகர் பகுதியில் சுமார் 50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். காரைக்கால் காமராஜர் சாலை, தலத்தெரு, கீழக்காசாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உட்புற சாலைகள் அமைப்பதற்கான சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். திருநள்ளாற்றில் பக்தர்களின் வசதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 21 கோடியை மதிப்பீட்டில் நடைபெற உள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் இரண்டு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுற்றுலா பயணிகள் இரவு தங்கும் விடுதி, 58 லட்சம் மதிப்பீட்டில் கீழாவூர் கிராமத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.


அதன் பின்னர் சுமார் ஒன்பது கோடி மதிப்பீட்டில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 75 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுக மேம்பாட்டு துணை பணிகளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், பி.ஆர். சிவா, நாக தியாகராஜன், ஜி.என்.எஸ் ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் 200 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புதுச்சேரி அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார் ரேஷன் கடைகளில் தொடர்ந்து அரிசி வழங்கப்பட்டு வருகிறது வரும் 15ஆம் முதல் ரேஷன் கடைகளில் 2 கிலோ கோதுமை வழங்கப்படும் எனவும் பொங்கல் தொகுப்பு பொங்கலுக்கு முன்னதாகவே வந்து சேரும் எனவும் தெரிவித்தார்.





