தற்காலிக பேருந்து நிலையத்தில் வசதி குறைவு என பொதுமக்கள் புகாரை அடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் செயல்படும் என ஏற்கனவே நகராட்சி அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 300க்கும் ஏற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஒரு நாளைக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருமங்கலம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் மதுரை நகருக்குள் செல்வதற்கு திருமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி நகரப் பேருந்தில் மதுரை செல்வது வழக்கம். இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்வதற்காக அங்கு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தற்காலிக பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் வெயில் மழையிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை.இது குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் கேட்டபோது திடீரென பேருந்து மாற்றப்பட்டதால் வசதிகள் செய்து தர முடியவில்லை எனவும் விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாக தெரிவித்தனர்.

ஆனால் தற்காலிக பேருந்து நிலைய பணிகள் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் ஞாயிறன்று பெய்த பலத்த மழையால் சேரும் சகதியமாக மாறியதால் பேருந்து நிலையத்திற்குள் வந்த பேருந்து ஒன்று சகதியில் சிக்கிக் கொண்டது. பேருந்தை வெளியே எடுக்க முயற்சித்து முடியாததால், தற்போது வரை பேருந்து அங்கேயே நிற்கிறது. இந்த நிலையில் நகராட்சி அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பணிகள் குறித்து பேசிய போது, அங்கு வந்த பயணி ஒருவர் பழைய பேருந்து நிலையத்தில் தவறாக இறங்கி விட்டதாகவும், தற்காலிக பேருந்து நிலையம் எங்கு உள்ளது என கேட்டால் முறையான பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் விரைவில் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளையும் செய்து தரவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என எச்சரித்தார். இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.









