சென்னையில் இருந்து டெல்லிக்கு, இன்று அதிகாலை புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்.
அதன் பின்பு விமானம் பழுது பார்க்கப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 2.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, டெல்லிக்கு புறப்பட்டது. விமானத்தில் 142 பயணிகள்,6 விமான ஊழியர்கள் உட்பட,148 பேர் இருந்தனர்.

இந்த விமானம் ஓடுவதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். இதை அடுத்து இந்த நிலையில், விமானத்தை வானில் பறக்கச் செய்தால் ஆபத்து என்பது உணர்ந்த விமானி, உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து விட்டு, விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தினார்.
இதை அடுத்து இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, ஓடு பாதையில் நிறுத்தப்பட்ட விமானத்தை, இழுத்துக் கொண்டு ரிமோட் ஃபே எனப்படும், ஒதுக்குப்புறமான இடத்தில் கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்தில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, சரி செய்யப்பட்டது.
அதன்பின்பு அந்த விமானம், இன்று அதிகாலை 4 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்தில் இருந்து தப்பியது.