கோவை, பிப்.12 மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த 49 சுற்றுலா நிறுவனங்கள், கோவை மற்றும் கொங்குப் பகுதியில் உள்ள பல முக்கிய சுற்றுலா மற்றும் பயண வர்த்தக நிறுவனங்களும் கலந்து கொண்டன.

இந்நிகழ்ச்சி, கொங்கு மண்டலத்துடன் மலேசியாவின் தொடர்பை மேலும் வலுப்படுத்தியது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டூரிசம் மலேசியா நிறுவனத்தின் தலைவர் டத்தோ மனோகரன் பெரியசாமி பேசுகையில், “ இந்தியா, மலேசியாவின் முக்கிய சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்கிறது. 2025ஆம் ஆண்டில் 15,65,194 இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா சென்றுள்ளுதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் 13.65 லட்சம் வருகைகளுடன் ஒப்பிடுகையில் 14.6 சதவீத உயர்வைக் குறிக்கிறது. “விசிட் மலேசியா இயர் 2026” திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து இவ்வருடம் 21 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கிடையேயான வலுவான விமான இணைப்பும், பயண வளர்ச்சிக்கு துணை புரிகிறது. இந்தியாவின் 14 நகரங்களில் இருந்து வாரத்திற்கு 238 நேரடி விமான சேவை (47,399 இருக்கைகளுடன்) இயக்கப்படுகின்றன. இதில், தென்னிந்தியாவிலிருந்து மட்டும் 151 வாராந்திர நேரடி விமான சேவை (29,541 இருக்கைகளுடன்) இயக்கப்படுவதால் தென்னிந்தியா, மலேசிய சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
டூரிசம் மலேசியாவின் விற்பனை மேம்பாட்டு துறையின் மூத்த இயக்குநர், நுவால் ஃபாதிலாபிந்தி அஸ்மி பேசுகையில், மருத்துவச் சுற்றுலா மூலம் மலேசிய நிறுவனங்களையும் இந்திய நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நீண்ட கால தொடர்புகளை ஏற்படுத்துவதின் அவசியத்தை எடுத்துரைத்தார். அவர் “விசிட் மலேசியா இயர் 2026”-ஐ முன்னிட்டு டூரிசம் மலேசியா அமைப்பு, தென்னிந்தியாவுடன் உள்ள வர்த்தகத்தை அதிகரிக்க உடனுக்குடன் தகவல்களை அளித்தும் புதிய சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

டூரிசம் மலேசியாவின் சென்னை இயக்குநர் ஹிஷாமுதீன் முஸ்தபா கூறுகையில், கோவை மற்றும் கொங்குப் பகுதியிலிருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பெரும் வாய்ப்பு உள்ளது. இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் டூரிசம் மலேசியா அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.










