ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் (27) வீரமரணம் அடைந்தார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முரளி நாயக் உள்ளிட்ட குழுவினர் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கோட்டில் பணியமர்த்தப்பட்டனர்.

பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த முரளி நாயக்கை தீவிர மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே, எல்லையில் பதற்றம் தணியாத நிலையில், ராணுவத்துக்கு உதவ டெரிட்டோரியல் ஆர்மியை அழைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேவைப்பட்டால் டெரிட்டோரியல் ஆர்மி வீரர்களை பாதுகாப்புப் பணிகளிலும், ராணுவத்துக்கு ஆதரவாகவும் நியமிக்க ராணுவத் தளபதிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் ரிசர்வ் படையான டெரிட்டோரியல் ஆர்மி, ராணுவத்தினருக்கு உதவியாக செயல்பட்டு வருகிறது. டெரிட்டோரியல் ஆர்மி வீரர்கள் முழுநேர ராணுவத்தினர் அல்ல. மொத்தம் உள்ள 32 டெரிட்டோரியல் காலாட்படை பட்டாலியன்களில் 14 பட்டாலியன்களை ராணுவத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, தென்மேற்கு, மத்திய மற்றும் அந்தமான் நிக்கோபார் கமாண்டுகளிலும், ராணுவப் பயிற்சி கமாண்டிலும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





