• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்..,

Byadmin

Jan 24, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி. இந்த வளாகத்தின் உள்ளே தேசத்திற்கான எதிர்கால கபடி வீரர்கள் மிகத் தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இதில் சிறப்பு என்னவெனில், இவர்களுக்காக இந்திய ராணுவம் தற்காலிக பணி அடிப்படையில் நான்கு ராணுவ வீரர்களை அனுப்பி ஊக்கமளித்து வருகிறது என்பதுதான் இதன். ஆம்… தேசிய அணியில் தமிழக வீரர்கள் நிறைய பேர் இடம்பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு உசிலம்பட்டி மண்ணின் மைந்தரும் இந்திய ராணுவத்திலுள்ள Red Army Kabadi அணியின் பயிற்சியாளருமான அலெக்ஸ் பாண்டியனுடன் ராணுவ வீரர்கள் நாமக்கல்லைச் சேர்ந்த சுரேஷ்குமார், மதுரையைச் சேர்ந்த பாபு ராஜன், ராஜஸ்தானைச் சேர்ந்த அமர் சிங், முன்னாள் ராணுவ வீரர் ஸ்டாலின் ஆகியோர் மிகத் தீவிரமான பயிற்சியை வழங்கி வருகின்றனர்.

தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த கபடி வீரர் தரணிதரன் கூறுகையில், ‘நாங்கள் பங்கேற்ற பல போட்டிகளில் வட மாநில வீரர்களை எதிர்கொள்வதில் சில சிக்கல்கள் இருந்தன. இந்த நேரத்தில்தான் இந்திய ராணுவ கபடி அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் பாண்டியன், இந்த பயிற்சி முகாமுக்கு பொறுப்பேற்றுள்ளார். ஆகையால் கபடியில் அவர் கற்றுத் தரும் நுணுக்கங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. நாங்கள் சாதாரணமாக பயிற்சி மேற்கொள்வதற்கும் இந்திய ராணுவ வீரர்களின் மேற்பார்வையில் பயிற்சி மேற்கொள்வதற்கும் வேறுபாடு இருப்பதை உணர்கிறோம். இந்த முகாமைப் பொறுத்தவரை இரண்டு மாத காலம் என்பதால் எங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ராணுவத்தில் பணியாற்றும் பிற விளையாட்டு வல்லுனர்களும் இந்த முகாமில் பங்கெடுத்துள்ளது எங்களுக்கெல்லாம் பெருமை’ என்கிறார்.

72 ஆவது சீனியர் ஆண்கள் தேசிய கபடி போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு அலெக்ஸ் பாண்டியன் வீரர்களை தயார்படுத்தி வருகிறார். இதற்கு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள 30க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு, தங்குமிட வசதி என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் பாலாஜி கூறுகையில், ‘மாநில அளவில் ஓசூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற உடன் நேரடியாக இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளோம். இதுவரை இல்லாத வகையில் இந்த முறை இரண்டு மாத பயிற்சி முகாம் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை நடைபெற்ற பயிற்சிகளில் வெறும் விளையாட்டு மட்டுமே கவனத்தில் கொண்டு வழங்கப்பட்டன. ஆனால் இந்த முகாமில் தனித்திறன், உடல் வலு, உள்ள உறுதி ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவது சிறப்பாக உள்ளது. இந்த முகாமில் எங்களுக்கான உணவு கூட மிகச் சிறப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கும் அழைத்துச் சென்று அதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. ரெட் ஆர்மி மூலமாக பிசியோதெரபியும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு அணியை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கான ஊக்கத்தை தொடர்ந்து அலெக்ஸ் பாண்டியன் வழங்கி வருகிறார். இதன் மூலமாக கண்டிப்பாக நாங்கள் தேசிய அளவில் சாதனை படைப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’ என்றார்.

தமிழக கபடி வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தங்களது முத்திரையை பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராணுவ வீரர் அலெக்ஸ் பாண்டியன் தன்னோடு இணைந்து பணியாற்றும் சக ராணுவ வீரர்களையும் இந்திய ராணுவத்தின் விளையாட்டு செயலாளர் அனுமதியோடு தற்காலிக பணி அடிப்படையில் இரண்டு மாத காலம் உசிலம்பட்டியிலேயே தங்கி இந்த பயிற்சி முகாமை வழிநடத்தி வருகிறார்.

பயிற்சி முகாமின் துணை பயிற்சியாளராக இயங்கி வரும் ராணுவ வீரர் பாபு ராஜன் கூறுகையில், ‘100 மீட்டர் 200 மீட்டர் தடகளத்தில் சாதனை படைத்து விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தேன். இதுவரை நான் ராணுவத்தில் தனி நபர் விளையாட்டுகளுக்கு தான் பயிற்சி அளித்துள்ளேன். தற்போது தான் ஓர் அணிக்கே பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒட்டு மொத்த அணியினரின் உடல் உறுதியை மேம்படுத்தும் முயற்சியில் தனி கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் இந்த பயிற்சியின் நோக்கமே வீரர்களுக்குள் தனி மனித ஒழுக்கத்தை கொண்டு வருவது தான். அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நேரத்தை கடைப்பிடித்தல், சரியான உடற்பயிற்சி, விளையாட்டு, ஊட்ட உணவு , பழக்கவழக்கம், பண்பு நலன், மனித மதிப்பீடு ஆகியவற்றில் கூடுதல் கவனம் கொடுக்கிறோம். இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் அனைவரும் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஆகையால் எங்களது வேலையும் மிக எளிதாக உள்ளது. தமிழ்நாடு சீனியர் கபடி அணி கோப்பையை வென்று ஏறக்குறைய 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதுதான் இந்த முகாமின் நோக்கம்’ என்கிறார்.

இதற்காகவே தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், இந்திய ராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, ராணுவ வீரர்கள் தமிழக கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கடந்த ஜனவரி 3ஆம் தேதி கடிதம் அனுப்பி இருந்தனர். இந்திய ராணுவம் அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளது. ஒரு மாநிலத்தின் கபடி அணிக்கு இந்திய ராணுவமே தற்காலிக பணி அடிப்படையில் தனது வீரர்களை அனுப்பி வைத்துள்ளது இதுதான் முதல் முறை என்கிறார் அலெக்ஸ் பாண்டியன். ஜன.5ஆம் தேதி‌ துவங்கிய இந்த பயிற்சி, பிப்.22ஆம் தேதி வரை‌ உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியின் உள்ளரங்க கபடி மைதானத்தில் நடைபெறுகிறது. நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் உடன், தனது சொந்த பணத்தையும் வழங்கி வீரர்களை ஊக்குவித்து வருகிறார் அலெக்ஸ் பாண்டியன்.

தொடர்ந்து பேசிய இந்திய ராணுவத்தின் ரெட் ஆர்மி கபடி அணியின் பயிற்சியாளர் அலெக்ஸ் பாண்டியன், ‘இந்திய ராணுவத்திலுள்ள எனது அணியின் வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார்கள். நமது தமிழ்நாடு அணியை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய ராணுவத்தில் உள்ள விளையாட்டுப் பிரிவின் செயலாளரிடம் சிறப்பு அனுமதி பெற்று, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த பயிற்சி முகாமை எனது கண்காணிப்பில் வழி நடத்தி வருகிறேன். கபடி அணியில் நமது தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழக வீரர்களின் திறமையையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். குறைந்தபட்சம் நான்கு பேராவது தேசிய அணியில் இடம் பெற வேண்டும். வரப்போகிற 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் சரி, 2036 ஒலிம்பிக் போட்டிகளிலும் சரி நமது தமிழக அணி சாதனை படைக்க வேண்டும். நமது தமிழ்நாட்டு அணியின் வீரர்களுக்காக தற்காலிக பணியின் பொருட்டு பயிற்சி அளிக்க சிறப்பு அனுமதி அளித்த இந்திய ராணுவ விளையாட்டு துறையின் செயலாளருக்கும் ராணுவ தளபதிக்கும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் செயலாளர் சபியுல்லா, தலைவர் சோலை எம். ராஜா ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

பேசிக்கொண்டே வீரர்களை அடுத்த பயிற்சிக்கு தயாராக உத்தரவிடுகிறார். ‘டேய்… இன்னைக்கு ஏன் உன் விளையாட்டு சுவாரசியமா இல்ல..? கவனம் வேணும். இல்லேனா நம்ம லட்சியத்தை நோக்கத்தை அடைய முடியாது. சாதிக்கணும்கிற வெறி இருக்கணும்… ஓடு.. ஓடு…’ என்று தோளில் கை போட்டவாறே சக வீரனை ஊக்கப்படுதிக் கொண்டே சுறுசுறுப்பாய் களமாடத் தொடங்குகிறார். ‘நிச்சயம் நாங்கள் சாதிப்போம் சார்..’ என்று நமக்கு கட்டைவிரலை (தம்ஸ்அப்) காட்டி விடை கொடுக்கிறார் அலெக்ஸ் பாண்டியன்