• Sat. Jun 10th, 2023

லஞ்சம், ஊழல் பட்டியலில் இந்தியா 85வது இடம்

Byகாயத்ரி

Jan 26, 2022

ஜெர்மனியின் பெர்லின் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு லஞ்சம், ஊழல் தொடர்பான பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2021ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘உலகின் 180 நாடுகளில் நிலவும் லஞ்சம், ஊழல் தொடர்பாக பல காரணிகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில் 86 சதவீத நாடுகளில் லஞ்சம், ஊழலை குறைப்பதற்காக பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

லஞ்சம், ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடுகளுக்கு அதிக மதிப்பெண்களும், அதிக லஞ்சம், ஊழல் உள்ள நாடுகளுக்கு குறைவான மதிப்பெண்களும் கிடைத்துள்ளன.கடந்த 2021ம் ஆண்டுக்கான பட்டியலில் அதிகபட்சமாக 88 மதிப்பெண்களுடன் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகியவை மிகவும் குறைவாக லஞ்சம் நிலவும் நாடுகள் பட்டியலில் முதல் இடங்களில் உள்ளன.

அவற்றைத் தொடர்ந்து நார்வே, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகியவை 85 மதிப்பெண் பெற்றுள்ளது. மிக அதிக அளவில் லஞ்சம் நிலவும் நாடாக 11 மதிப்பெண்களுடன் தெற்கு சூடான் உள்ளது. அதைத் தொடர்ந்து சிரியா, சோமாலியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான் உள்ளன.இந்தப் பட்டியலில் 28 மதிப்பெண்களுடன் 140வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2020ல் 124வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது 16 இடங்கள் சரிந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் 120வது இடத்தில் இருந்தது. இந்தப் பட்டியலில் இந்தியா 40 புள்ளிகளுடன் 85வது இடத்தில் உள்ளது’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *