• Sun. Apr 28th, 2024

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு..!

Byவிஷா

Aug 17, 2023

கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநில காவரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று மதியம் இந்த தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 12,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
இங்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *