• Fri. Mar 29th, 2024

நாகாலாந்தில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு…

Byகாயத்ரி

Dec 7, 2021

நாகாலாந்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் நாகலாந்து அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் என்எஸ்சிஎன் (கே) உள்ளிட்ட நாகா குழுக்கள், அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ எனும் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு பல்வேறு நாச வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், என்எஸ்சிஎன்(கே) அமைப்பின் யங் ஆங் பிரிவினர் சிலர் இந்தியா-மியான்மர் எல்லையை ஒட்டிய நாகலாந்து மாநிலத்தின் மோன் பகுதியில் நடமாடி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.

அப்போது, ஓடிங்-திரு கிராமங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில், நிலக்கரி சுரங்கத்தில் வேலை முடிந்து கிராம மக்கள் வழக்கம் போல் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனில் தீவிரவாதிகள் வருவதாக எண்ணிய பாதுகாப்பு படையினர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் பொது மக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 16 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றிய அரசு ரூ.11 லட்சமும் மாநில அரசு ரூ.5 லட்சமும் வழங்க உள்ளன.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஒன்றிய அரசு மற்றும் நாகாலாந்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை செயலாளர், நாகலாந்து மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் கூட மனிதாபிமான முறையில் கையாண்டு இருக்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினரை மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *