• Sat. May 4th, 2024

புதிய தேர்தல் ஆணையாளர்கள் பதவியேற்பு

Byவிஷா

Mar 15, 2024

புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பிர்சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ஓய்வுபெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9-ஆம் தேதி திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். இது, நாடு முழுவதும் பேசுபொருளானது. இதையடுத்து, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 1988 பேட்ச்சைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்.
உத்தரகாண்ட் கேடரைச் சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் உட்பட முக்கிய அரசு பதவிகளை வகித்துள்ளார். கேரள கேடரைச் சேர்ந்த ஞானேஷ்குமார், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார். இதைத் தொடர்ந்து, புதிய ஆணையாளர்களான நியமிக்கப்பட்ட இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *