தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழா வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

தாம்பரம் ரங்கநாதபுரம் சுகாதார மையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி விழாவை கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து சண்முகம் பிரதான சாலையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாம்பரம் யாக்கூப், “மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அரசியலுக்காக மட்டும் அல்லாமல் சமூக சேவை நோக்கத்துடன் துவங்கப்பட்டது. வர்தா புயல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் காலங்களில் கட்சி பல்வேறு உதவிகளை செய்துள்ளது” என்றார்.
மேலும், சட்டமன்றத்திலும் மாமன்றத்திலும் உறுப்பினர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மக்களின் மனதில் இடம்பிடித்த கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி வளர்ந்துள்ளதாகவும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் வழங்க வேண்டும் எனக் கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் ஆதரவு கட்சிக்கு இருப்பதாகவும், எந்த தொகுதியை வழங்கினாலும் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், தாம்பரம் தொகுதியும் வழங்கப்பட்டால் ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.










