• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா

ByKalamegam Viswanathan

Sep 27, 2024

ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் கோவில் முருகன் சன்னதியில் இருந்து வேல் பல்லாக்கில் எடுத்துச் செல்லப்பட்டு மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் கீழே கோயிலுக்கு கொண்டு வரப்படும்.

மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களுக்கு கதம்ப சாப்பாடு பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா இன்று நடைபெற்றது.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிர மணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

இதில் மலை மேல் வேல் எடுக்கும் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் மலை மேல் எடுக்கும் விழா கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை நடைபெற்றது.

விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரித்து பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் சன்னதி தெரு, பெரிய ரத வீதி, கீழ ரத வீதி, மேல ரத வீதி வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து அங்குள்ள குமரருக்கு சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனி யாண்டவருக்கு சிறப்பு அபி ஷேகங்கள், அலங்காரங் கள் நடைபெற்று, சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடை பெற்றது. மாலை வரை வேல் பழனி ஆண்டவர் திருக்கரத்தில் இருக்கும்.

இரவு 7 மணியளவில் பூ பல்லக்கில் வேல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணியசுவாமி திருக்கரத்தில் சேர்க்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பா. சத்தியபிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வன், ராமையா, கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.