• Sat. Nov 2nd, 2024

கோவையில் பெய்த கனமழையில், போதையில் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை பாடல் பாடிக்கொண்டிருந்த நபரின் வீடியோ..!

BySeenu

Nov 10, 2023

வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தததன் காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடைய கோவை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் சாலையில் மழைநீர் வடிகால் வழிந்து சாலையில் மழைநீர் ஓடி வருகிறது. இந்த பகுதியில் உள்ள செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி, மழைநீர் வடிகாலில் நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும், செட்டி வீதி அசோக் நகர் பகுதிகளில் வீடுகளிலும் நீர் புகுந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து புகுந்துள்ளது.

செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி அடுத்து உக்கடம் பெரியகுளம் குளத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், உக்கடம் குளம் முகத்துவாரம் அடைப்பு காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்புகளிலும் புகுந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்து வரும் நிலையில், அவ்வப்போது குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மழைநீர் வழிந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

செல்வசிந்தாமணி குளம் நிரம்பியதை அடுத்த ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகமாக தண்ணீர் வந்ததால், கால்வாய் உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதனால் சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் அசோக் நகர் பகுதிக்குள் புகுந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்னிலையில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் வெள்ள நீரில் மீன் பிடித்தனர்.

இதனிடையே போதையில் இருந்த நபர் ஒருவர் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை பாடலையும், ஏமாற்றாதே ஏமாற்றாதே பாடலையும் பாடிக் கொண்டிருந்தார். இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *