
மதுரை சோழவந்தான் அருகே தாரப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலை தொடர்பாக அனுமதி மறுத்து பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு ஒலிபெருக்கிகளை சேதம் விளைவித்து பெண்கள் மற்றும் கிராம பெரியவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் ஒற்றுமையாக உள்ள இரு தரப்பினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாகவும் இன்ஸ்பெக்டர் சிவகுமாரை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மக்கள் மதுரை ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மற்றும் கொடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி திருக்குமரன் ஆகியோர் சாலை மறியல் செய்த பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். தாராப்பட்டி கிராம மக்கள் மறியல் காரணமாக மேலக்கால் கோச்சடை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

