• Fri. Apr 26th, 2024

ஜி20 மாநாடு குறித்து டெல்லியில்
பிரதமர் மோடி ஆலோசனை

ஜி20 மாநாடு தொடர்பாக 40 கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, சீனா, தென்அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை கொண்டிருக்கும் இந்த நாடுகள், உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இதைத்தவிர உலக வர்த்தகத்தில் 75 சதவீத பங்களிப்பையும் கொண்டிருப்பதால், ஜி20 அமைப்பு சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த முக்கிய அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு தற்போது கிடைத்து உள்ளது. இந்த கவுரவமிக்க பதவியை கடந்த 1-ந்தேதி முதல் இந்தியா அலங்கரித்து வருகிறது.
இந்த நிலையில் ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இது தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டுக்கு, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை இந்தியா உருவாக்கி இருக்கிறது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த உச்சி மாநாட்டில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கூட்டங்கள், நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் ஜி20 அமைப்பின் முக்கிய கூட்டங்களில் ஒன்றான ஷெர்பா கூட்டம் ராஜஸ்தானில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல், அதில் தாக்கல் செய்யப்படும் பிரகடனத்தில் சேர்ப்பதற்கான அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இதில் இந்தியா உள்பட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.
மறுபுறம் ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வகையில், அதற்கான திட்டமிடலுக்காக 200-க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *