• Fri. Jan 17th, 2025

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் ஆவேசம்

Byவிஷா

Mar 26, 2024

கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பச்சான் தேர்தல் என்பது எத்தனை எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும், எத்தனை எத்தனைத் தலைவர்கள் வந்தாலும், என் மக்கள் என்றும் பரதேசியாக தான் உள்ளனர். வளர்ச்சி பெறவே இல்லை என ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை, கூட்டணி கட்சியினரிடையே அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நேற்று முன் தினம் இரவு கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாமக சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பாமக மற்றும் பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், “நான் 7 வயதில் பார்த்த கடலூர், 62 வயதிலும் அதே நிலையில் உள்ளது. எத்தனை எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும், எத்தனை எத்தனைத் தலைவர்கள் வந்தா லும், என் மக்கள் என்றும் பரதே சியாக தான் உள்ளனர். வளர்ச்சி பெறவே இல்லை
தலைவர்களின் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து போயிருக்கிறோம். அந்த கோபத்தின் வெளிப்பாடாகவே நான் இந்த இடத்தில், இப்போது வேட்பாளராக நிற்கிறேன்.
தேர்தல் என்பது வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது. ‘இலவசங்கள் வேண்டாம்’ என்ற நிலை என்று உருவாகிறதோ அன்றுதான் நமக்கு உயர்வு வரும். சின்னத்தைப் பார்த்து வாக்களிக்காமல், ஒருவரின் தகுதியைப் பார்த்து வாக்களியுங்கள்

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது. மக்களின் நலனுக்காக நான் யார் காலில் வேண்டுமானாலும் விழுவேன்.எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு நல்லது, இல்லை என்றால், எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான கூட்டணி, இது சாதனை புரியும் கூட்டணி. இன்னும் இருவாரங்களில் நம் தொகுதி முழுவதும் உள்ள மக்களைச் சந்தித்தாக வேண்டும். எனது பிரச்சாரப் பணியை முதலில் நிறைவாக செய்ய வேண்டும்” என்றார்.

முன்னதாக கூட்டத்துக்கு வந்த இளையோர் பலர் தங்கர்பச் சானுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு, அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்