• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நடத்தினர்.

BySeenu

Feb 2, 2024

கோவை உட்பட தமிழகத்தின் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு காவல்துறை நடத்திய வாகன சோதனையின் போது, கைத்துப்பாக்கி, வெடிமருந்து, முகமூடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவீன் சக்கரவர்த்தி (25) சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சஞ்சய் பிரகாஷ் (24) சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வெடிப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
விசாரணையில் யூடியூப் பார்த்து இருவரும் நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது கொண்ட பற்று காரணமாக, அதே போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க இருவரும் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த இருவரையும் இன்று சேலம் மாவட்டம் செட்டிசாவடி பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐந்து பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், வீட்டின் உரிமையாளரான ராதாகிருஷ்ணன் என்பவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல் கோவை ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித் என்பவரது வீட்டிலும், காளப்பட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த என்ஐஏ சோதனை காரணமாக தமிழ்நாட்டில் அதிகாலை முதல் பரபரப்பு நிலவி வருகிறது.