• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 1, 2022

நற்றிணைப் பாடல் 32:
‘மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன்’ என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரிய- வாழி, தோழி!- பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.

பாடியவர் கபிலர்
திணை குறிஞ்சி

பொருள்:

மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது பக்கத்தில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்து வைத்திருக்கிறார்கள்.