• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

May 12, 2024

நற்றிணைப்பாடல்: 371

காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம் நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே.

பாடியவர்: அவ்வையார் திணை: முல்லை

பொருள்:

பாகனே! இதுகாறும் மழைபெய்யாதிருந்த மேகங்கள் நிறைய மலர்ந்திருக்கின்ற காயா மரங்களையுடைய மலையின்கண்ணே இடையே சரக்கொன்றை மலர்ந்தாற்போல; பெரிய மலைப் பிளப்பிடங்கள் எல்லாம் விளங்கும்படியாக மின்னி; என் காதலியாகிய மாமை நிறமுடையாள் இருந்த இடம் நோக்கிச் சென்று; அகன்ற கரிய ஆகாயத்தினிடம் எல்லாம் மறைபடும்படி பரந்து மழை பெய்யத் தொடங்கிவிட்டன; ஆதலால் ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி நிழல் விளங்கிய ஒளியையுடைய கைவளைகள் கழன்றுவிழத் திண்ணமாக ஏக்கமுற்று அழத் தொடங்கினளேயாம்; அவள் அழுமிடத்துக்கு எதிரே இராப்பொழுதில் முழங்குகின்ற இடியோசை போலக் கோவலர் புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினவராவார்.