• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 28, 2024

நற்றிணைப்பாடல் 349:

கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,
பின்னிலை முனியா நம்வயின்,
என் என நினையும்கொல், பரதவர் மகளே?

பாடியவர்: மிளை கிழான் நல்வேட்டனார் திணை: நெய்தல்

பொருள்:

விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?