• Sat. Apr 27th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Mar 25, 2024

நற்றிணைப்பாடல் 347:

முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
அழி துளி தலைஇய பொழுதில், புலையன் பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
‘நீர் அன நிலையன்; பேர் அன்பினன்’ எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய காண வீடுமோ – தோழி! – என் நலனே?

பாடியவர் : பெருங்குன்றூர் கிழார் திணை: குறிஞ்சி

பொருள்:

தோழீ! வேனிற் காலத்து நுணலை மணலுள் முழுகி மறைந்து கிடப்பதுபோல என் உடம்பினுள்ளே பொதிந்து கரந்துறையும் என் நலனானது என்னை ஒறுத்துக் கொன்றொழிவதல்லது; முழங்குகின்ற கடலில் விழுந்து நீர் பருகியதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; திசைகளின் அகன்ற இடமெல்லாம் மறையும்படி பரவி; உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழுமாறு செய்து முழங்கிய இடியினாலே பாம்புகளை மோதி; விசும்பிலுயர்ந்த முடியையுடைய குன்றுகளை ஒருங்கே சூழ்ந்து; சிதைந்த மழையின் துளிகளை யாண்டும் பெய்தொழிந்த பொழுது; புலையனது அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணில் மோதுதலானெழுகின்ற ஒலிபோன்ற ஓசையுடனே அருவி நீர் கீழிறங்கி யோடும் பெரிய மலை நாடனாவான்; இன்னதொரு நிலைமையுடையன் பெரிய அன்புடையவன் என்று; பலவாய அவனுடைய மாண்புகளெல்லாங் கூறும் பரிசிலருடைய நெடிய சிறந்த மொழிகளை; யான் காணவும் கேட்கவும் அங்ஙனம் கண்டு கேட்டுக் களிக்குமளவும் என்னை உயிரோடு விடுமோ? அவை இரங்கத்தக்கன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *