• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 19, 2024

நற்றிணைப்பாடல் 345:

கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,
வெளிய விரியும் துறைவ! என்றும் அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தௌவே!

பாடியவர்: நம்பி குட்டுவனார் திணை: நெய்தல்

பொருள்:

மிக்க காற்று மோதுதலானே கடற்கரைச் சோலையிலுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசிய காய்; நீல நிறத்தையுடைய பெரிய கழியிடத்து உள்ளே சென்று பொருந்தும்படி விழுதலாலே; அது மோதப்பட்டு ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெளிய நீர்க்காக்கை கொட்டாவி விட்டாற் போன்ற வெளியவாய் மலராநிற்கும் துறைவனே! எக் காலத்தும் கருணை செய்தலையுடைய பெரிய கேண்மையுடைய நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக்கொண்ட செம்மையுடையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாப்பேமென்று அரிய சூள்வைத்து அவர் தெளியாத நெஞ்சுடனே செயலழிந்து வாடும்படி நெடுநாள் காறும் விரும்பாதிருப்பாராயின்; அங்ஙனம் தஞ்சமென்று புகுந்தார் தாம் உயிர்வாழ்வது எவ்வாறோ? நீ இங்கு நயந்து தெளிவிக்கும் தெளிவு முழுவதூஉம் அழிந் தொழிவதாக; இவள் தான் படுகின்ற துன்பமெல்லாம் நுகர்ந்து அழிவாளாக!