• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 15, 2024

நற்றிணைப்பாடல் 341:

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் துணை நன்கு உடையள், மடந்தை: யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம், தமியேம், பாசறையேமே

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார் திணை : குறிஞ்சி

பொருள்:

இங்கு ஒரு குன்றின்மேற் காணப்படு மடந்தை வெள்ளி போன்ற வரிகளையுடைய கற்பாறையிலே விழும் அருவியாடி அதிற் சிறிது வெறுப்படையின்; சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினாலாக்கிய வட்டைச் சாடியின்வாயில் வைத்து அதன் நாவினால் காய்ச்சி வடிக்கப்படுகிற விளையாடும் இனிய மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளின் தெளிவை (சாராயத்தை)ப் பருகி; அதன் மயக்கம் மிகுதலாலே சுழன்றோடி வந்து மரக்கொம்பினையொடித்து ஓங்கிக் காட்டிச் சில வார்த்தையைக் கூறி; குன்றகத்துள்ள தன் காதலனாகிய குறவனொடு சிறிய நொடி பயிற்றுகின்ற நல்ல துணையுடையளாயிராநின்றாள்; இங்ஙனம் எம்மோடு எம் காதலி கள்ளின் தெளிவைப் பருகிக் குறு நொடி பயிற்றி மகிழாவாறு யாம் நெருங்குதற்கரிய கொடிய பகைவர் முன்னிலையிலே; குளிர்ந்த மழை பெய்தலினால் நீர்மிக்க ஈரிய கான்யாற்றங்கரையில் நாட்காலையிலே; கூதிரொடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்தலானே மயங்கி; அத்துன்பத்தைப் போக்கவல்ல துணையின்றித் தமியேமாய்ப் பாசறையின்கண் இராநின்றேம்.