• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 14, 2024

நற்றிணைப்பாடல் 340:

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!

பாடியவர்: நக்கீரர் திணை : மருதம்

பொருள்:

மகிழ்நனே! பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானையையும் விரைந்து செல்லுந் தேரினையும் உடைய செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளத்து நீர் மடையடைத்திருந்தது திறந்துகொண்டோடியதனாலே; அக்குளத்தினின்றும் புறம்போந்து கால்வாயை யடைந்து சென்று திரும்பிய திரண்ட கோட்டினையுடைய வாளைமீன்; அக் கால்வாயினின்றும் சேற்றையுடைய வயலினுள்ளாலோடி; ஆங்கு உழுது வருகின்ற எருமைக்கடாவின் காற்சேறுபட்ட புள்ளியுடைய வெளிய மேற் புறத்தோடு செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர் தங்கைக்கோல் கொண்டு புடைத்தற்கும் அஞ்சாது பெருக்குற்று; நீர் பொருந்திய சேற்றின்மேல் வரம்படியிலோடி அப்பாற் போக இயலாமையால் அவ்வரம்படியிலே புரளுகின்ற; வாணனது காவிரியின் வடபாலுள்ள ‘சிறுகுடி’ என்னும் ஊர்போன்ற; என்னுடைய கோற்றொழிலமைந்த அழகிய ஒளி பொருந்திய வளை நெகிழும்படி செய்த நின்னை; புல்லவுஞ்செய்யேன்; அதனால் நின்னை வெறுத்தேனுமல்லேன்; அயலாந் தன்மையேனாதலின் என்னைத் தீண்டாதேகொள்!